Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2007

தல பாலபாரதியின் டி.வி நிகழ்ச்சிய யாருக்கும் சொல்லலே;அதாலே
பார்க்க/கேட்க முடியலே னு மாஞ்சு மாஞ்சு எழுதறாங்க;கண்ணீர் ஆறா
ஓடுது……..தலயும் தேம்பிகிட்டுதான் இருக்கார்! ஏன்னா அவர் நிகழ்ச்சி
விபரத்தெ ரெண்டு பேர்ட்ட மட்டும்தான் சொன்னார்!(ரகசியமாம்!….ஏன்னா பா.க.ச
ஆளுங்க அங்கும் வந்திடுவாங்களாம்)

ஆனால், அவங்க ரெண்டு பேருமே நிகழ்ச்சிய பார்க்கல்லே;
பகிஷ்கரிச்சுட்டாங்க!

ஏன்னு கேட்டாராம் பாபா.

“அந்த டி.வி ய பார்ப்பது என் கொள்கைக்கு, கோட்பாட்டிற்கு
சித்தாந்தத்திற்கு விரோதமானது”னு சுனாமியார் சொன்னார்.

“அந்த ஒருமணி நேரமும் எங்க ஏரியாவே கரண்ட்கட்”னு
யானைத்தோழி சொல்றாங்க.

பாவம்! பாலபாரதிக்கு தான் என்ன சொன்னோம்[? !]னு
க்ராஸ்செக் செய்யக்கூட சான்ஸ் இல்லாமத் திண்டாடுறார்.

இப்ப.”சொல்லாத இடந்தனிலே சொல்ல வேண்டாம்”னு
புதிய ஆத்திச்சூடி எழுதிட்டிருக்கார்!

இது நூற்றுக்கு நூறு உண்மை; கற்பனை இல்லை!

எவர் வேண்டுமானாலும் அந்த மூவரிடமும் விசாரித்துக்கொள்ளலாம்!

Read Full Post »

           என் எட்டில் மீதமுள்ள நான்கு இங்கே:

          5). எம்.ஏ
 முதல் ஆண்டில் படிக்கும் பொழுது, விடுதி அறையில் மூவர் இருந்தோம். மூவருக்கும் அரசியலில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. ஒரு நண்பருக்குப் போதிய வருகைப்பதிவு இல்லையென்பதால் முதல் ஆண்டிலேயே நிறுத்தப் பட்டார்.(ரூமிலேயே தூங்கிக்கொண்டிருந்தால் விட்டுடுவாங்களா?) புத்திசாலித்தனமாக அடுத்த ஆண்டில் அவர் பி.எட்(B.Ed) வகுப்பிற்கு மாறி படிப்பைத்தொடர்ந்தார்;பின்பு அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனார். எம்.ஏ இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நான் துணைப்பேராசிரியராகப் பணியேற்றேன். சுமாரான மதிப்பெண்கள் பெற்ற மற்றவர் திருத்துனர்(Tutor) பணியேற்றார். மூவருமே கற்பிக்கும் பணியை ஏற்றிருந்தோம்.

           1967- சட்டமன்றத் தேர்தல்! பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் பதவிவிலகி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்! மூன்றுமுறை எம்.எல்.ஏ ஆகவும் ஒருமுறை எம்.பி(மாநிலங்கள் அவை) ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
           
      திருத்துனராகப் பணியாற்றியவர் 1970 களின் ஆரம்பத்தில் பணியிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். 1977 தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், 1980 தேர்தலில் எம்.எல்.ஏ ஆனார். சில ஆண்டுகளில்  அமைச்சராகவும் பொறுப்பேற்றார்!

      நான் பேராசிரியாராக இருந்து ஓய்வு பெற்றேன்.
      நீதி? நீங்களே முடிவு செய்யுங்கள்.

          6).பல்கலைக்கழக இளங்கலை- பொருளியல் பிரிவின் பாடதிட்டக்குழுவின் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். உறுப்பினர்களுள் ஒருவரான டாக்டர். ராமதாஸ் (தற்பொழுது புதுச்சேரி தொகுதியின் நாடாளுமன்ற பா.ம.க உறுப்பினர்) “மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, பாடதிட்டத்தில் பெரும்பகுதியை மாற்றலாம்” என்றார். “அது செயல்வடிவம் பெற நீண்ட காலம் ஆகும்.எனவே, பொருளியலில் ஒரு புதிய பிரிவை உருவாக்குவோமே” என்றேன்.அதன்படி” நிறுமப் பொருளியல்” (Corporate Economics-Main) எனும் முதன்மைப்பாடத்திற்கான பாடதிட்டத்தை உருவாக்கினோம். கல்விக்குழு இப்பாடதிட்டத்தை வரவேற்று அங்கீகரித்தது. ஆனால், இன்றுவரயில் ஒரு கல்லூரியில் மட்டுமே இப்பிரிவு பயிற்றுவிக்கப்படுகின்றது. இத்தயக்கத்திற்கு எது அல்லது யார் காரணம் என்பதை இன்னும் யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

          7).நான் ஒரு கணினி கைநாட்டு. கணினியில் நுழையவும் வெளியேறவும் மட்டுமே தெரியும். சக வலைப்பதிவர்கள் உதவியால் வலையுலகில் வலம் வருகின்றேன்.  இதில் ட்டிபிஆர் ஜோஸப், துளசிட்டீச்சர், பொன்ஸ், பாலபாரதி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது. ஆகஸ்ட் 5,’ பதிவர் பட்டறை’யில்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

           8).தருமி அவர்களை மூத்த பதிவர் என்று குறிப்பிட்ட பொழுது, ஞானவெட்டியான் அவர்கள் தாம்தான் மூத்த பதிவர் என்றார். என் பிறந்ததேதியை அவருக்குத் தெரிவித்தேன்.
அவர்,”நான் விலகிக்கொள்கிறேன்; நீங்கள்தான் மூத்தவர்” என்றார்.(வேறு யாரும் இருந்தால் சொல்லிடுங்க சாமி). வலைதளத்தில் அதிக நேரம் செலவழிக்கும் (வயதால்) மூத்த பதிவர் நான். ஆனாலும் “அனுபவிக்கணும்….ஆராயக்கூடாது”{உபயம்:  பாலாஜி(வெட்டிப்பயல்)} என்பதை மறப்பதில்லை!

       யார் யார் எட்டு போட்டீங்க, யார் யார் போடவில்லை என்பது தெரியவில்லை. எனவே இதுவரையில் போடாத நண்பர்களை அழைக்கின்றேன். ஏற்கனவே போட்டவர்கள் மீண்டும் போட்டாலும் பரவாயில்லெ; படிக்க நாங்க இருக்கிறோம்லெ!
          

Read Full Post »

           ஆறு ஆட்டத்திற்கு துளசி ட்டீச்சர் அழைப்பு விட்டாங்க; தலைமறைவு ஆயிட்டோம்ல! இப்போ எட்டு போடச்சொல்லி ட்டிபிஆர் ஜோஸப்பும் வினையூக்கியும் அழைக்கிறாங்க! அவர்கள் மூவருக்கும், இப்ப என் பதிவைப் படிக்க இருப்போர்க்கும் இப்போதே நன்றி சொல்லிடறேன்.

                   1).எங்க ஊரில்(ஊர் என்ன பெரிய ஊர்?என்பதே வீடுகள்) முதன் முதலில் (அப்பொழுதைய) எஸ்.எஸ்.எல்.சியில் தேர்ச்சி பெற்றவன் நாந்தான். அதனால் கல்லூரியில் எப்படி சேர்வது, என்ன பாடம் எடுப்பது என்பதெற்கெல்லாம் வழிகாட்டுதல் இல்லை.அதுவரையில் தமிழ்வழியில் படித்தவன்.எப்படியோ, நானே முயன்று கல்லூரியில் சேர்ந்தேன்…..பிற்காலத்தில் எங்கள் பகுதியிலிருந்து கல்லூரியில் சேர விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே சேவை புரிந்ததில் மன நிம்மதி!

                   2).கல்லூரிநாட்களில் ஒருமுறை பெரியார் ஈ.வே.ராவின் பொதுக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ‘பொருள் முதல் வாதம்’ எனும் அவருடைய புத்தகத்தை வாங்கி, அதில் அவரைக் கையொப்பம் இடக் கேட்டுக்கொண்டேன். அவர் கையெழுத்திட்டவுடன் ஒரு ரூபாவைக் கொடுத்தேன். “எதற்கு?” என்றார். “கையெழுத்திற்கு…..” என்றேன். “மாணவருங்களா? என்ன படிக்கிறீங்க? நல்லா படிங்க…” என்று பேசிக்கொண்டே என்னிடம் பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு சொன்னார்: “புத்தகம் வாங்கினால் கையெழுத்திற்குப் பணம் இல்லை…” காசாசை பிடித்தவர் என்று கூறப்பட்ட அவரின் அந்த நாணயம் என்னை சிலிர்க்க வைத்தது; வாழ்க்கைக்கு வழிகாட்டியது!

                    3).விரிவுரையாளராகப் பணி புரிந்தேன். வகுப்பிற்கு அடிக்கடி மட்டம் போடும் ஒரு குறும்புக்கார மாணவன். ஒருநாள் அவனைத் தனியே மடக்கினேன். அவனுடன் பேசிப்பேசி, அவனுடைய வறுமைதான் இதற்குக் காரணம் என அறிந்தேன். அதுமுதல் அவன்மீது தனிக்கவணம் செலுத்தி, சில உதவிகளும் செய்தேன். பட்டப்படிப்பை முடித்தபின் சட்டக்கல்லூரியில் சேர்ந்தான். சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக,ரிமாண்ட் செய்யப்படுவதற்கு, நீதிபதி முன் நிறுத்தப்பட்டேன். என் பெயர் படிக்கப்பட்டவுடன் நீதிபதி எனக்கு வணக்கம் செலுத்தினார்! நான் திகைத்துப்போனேன்! அட! நமது பழைய குறும்புக்கார மாணவன்தான் நீதிபதி!

                    4).எம்.ஏ வகுப்பில் ஒரு மாணவனும் மாணவியும் அடிக்கடி தனியே சந்தித்து மணிக்கணக்கில் பேசிக்கொள்கின்றனர் என்று ஒரு புகார். துறைத்தலைவர் என்னை அழைத்து,”அவர்களைக் கண்டிக்க வேண்டும்…” என்றார். கண்டிப்பிற்கு அடங்கும் வயதா இது? “அவர்களுடையப் பெற்றோரை அழைத்துச் சொல்வோம்” என்றார்.அவர்கள் இருவருமே அவரவர் குடும்பத்திலிருந்து கல்லூரிக்கு வந்த முதல் தலைமுறையினர். பெற்றோருக்கு விபரம் தெரிந்தால், அவர்களுடைய படிப்பே நிறுத்தப்படலாம். எனவே அவர்களுடைய வகுப்புத்தோழர்கள் சிலரை (இவர்கள்தானே அவர்களுக்கு ஊக்கமளிப்போர்!) அழைத்துப் பிரச்சினையின் தீவிரத்தை விவரித்தேன். அதற்கு நல்ல பலன் தெரிந்தது. அதற்குப்பின்னர் அவர்கள் சேர்ந்து காணப்படுவது நின்றுவிட்டது. படிப்பு முடிந்த பின்பு அவர்களுடைய காதல்+கலப்புத் திருமணம் நடந்தேறியதாகக் கேள்விப்பட்டோம். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது, அவர்களுடைய மகள் ஒரு ஐ.ஏ. எஸ் என்று அறியும் பொழுது, ஒரு கூட்டைச் சிதையாமல் காப்பாற்றியதில் என் பங்கும் உள்ளது எனும் உணர்வு தோன்றுகின்றது!

            பதிவு பெரிதாகிவிட்டது. எனவே இதன் அடுத்த பகுதி நாளை தொடரும்…………..

Read Full Post »